தஞ்சை வாக்கு எண்ணும் மையத்தில்

தஞ்சை, ஜன. 3: தஞ்சை வாக்கு எண்ணும் மையத்தில் போதிய அடிப்படை வசதி செய்யாததால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.தஞ்சை ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் மேரீஸ் கார்னர் அருகே உள்ள தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் நாளான நேற்று இந்த மையத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்கு எண்ணும் பணி காலையில் துவங்கியது. வாக்கு எண்ணும் மையம் முதல் கீழ்தளம் என 3 இடங்களில் நடந்தது. மேலும் வாக்கு பெட்டிகள் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக கொண்டு வரும் பணி ஒருபுறம் நடந்து வந்தது.இதில் ஆண் பணியாளர்களை விட பெண் பணியாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் போதிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரவில்லையென பணியாளர்கள் குற்றஞ்சாட்டினர். பள்ளி வளாகத்தில் 2 இடங்களில் மட்டுமே கழிவறை வசதி இருந்தது. இவை போதுமானதாக இல்லாத நிலையில் பெண்கள் சிரமப்பட்டனர். மதியம் 2 மணி வரை உணவு வராததால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் 2.30 மணியளவில் உணவு வந்த நிலையில் ஒருவரையொருவர் முந்தி கொண்டு பொட்டலத்தை வாங்க முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் உணவு பொட்டலங்களை போலீசார் வழங்கினர்.

ஆனால் பலருக்கு உணவு பொட்டலம் கிடைக்காததால் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியே சென்று உணவு சாப்பிட்டு வந்தனர். இதனால் ஒரு மணி நேரம் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.உணவை அமர்ந்து சாப்பிட இடம் இல்லாததால் பலரும் கையில் வைத்து கொண்டு நின்ற படியே சாப்பிட்டனர். உணவும் தரமின்றி இருந்ததாக பலரும் புகார் தெரிவித்தனர். கை கழுவ ஒரே ஒரு குழாய் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததால் சிரமத்தில் தவித்தனர். குடிநீர் குடிக்க குவளை இல்லாத நிலையில் அங்கிருந்த பிளாஸ்டிக் வாளி மூடிகளில் தண்ணீரை பிடித்து பணியாளர்கள் தாகத்தை தணித்து கொண்டனர்.வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படாத காரணத்தால் குழப்பத்திலேயே பணியாற்றினர். வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அறிவிக்க பணியாளர்கள் நீண்ட நேரம் எடுத்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கவில்லை. மறுநாள் அதாவது இன்று (3ம் தேதி) சான்றிதழ் வந்து பெற்று கொள்ளும்படி அறிவித்து வெற்றி பெற்ற வேட்பாளரை அனுப்பி வைத்தனர்.

சாப்பாட்டுக்கு முண்டியடித்த அலுவலர்கள் குடிநீர் அருந்த டம்ளர் வைக்காததால் அவதி குலுக்குல் முறையில் தேர்வு தஞ்சை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 2 வேட்பாளர்கள் தலா 409 வாக்குகள் பெற்றனர். இதில் மஞ்சுளா, மலர்விழி ஆகியோர் சரிசமமான வாக்குகள் பெற்றனர். இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரபாகரன் தலைமை வகித்து வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தல் விதிகளின்படி குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவராக மஞ்சுளா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories: