கோவை இஸ்கான் கோயிலில் ஜெகநாதர் திருமஞ்சன சேவை

கோவை,டிச.30:கோவை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் நடக்கும் தேர்த்திருவிழாவையொட்டி, இஸ்கான் கோயிலில் நேற்று ஜெகநாதர் திருமஞ்சன சேவை நிகழ்ச்சி நடந்தது. கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி தேர்த்திருவிழா நடக்க உள்ளது. மூலவர் விக்கிரகங்கள் தேரில் பவனி வருவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும். தேர்திருவிழாவையொட்டி நேற்று திருமஞ்சன சேவை விழா நடந்தது. நாட்டின் புனித நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்தங்களால் மரத்திலான ஜெகநாதர், பலதேவர் மற்றும் சுபத்ராதேவியார் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஜெகநாதருக்கு வட மற்றும் தென் மாநிலங்களில் புகழ்பெற்ற வகை வகையான இனிப்புகள், காரங்கள், உணவு வகைகள், பழச்சாறு, பானங்கள், கேக்குகள், ஐஸ்கிரீம்கள் என 1008 உணவுப்பதார்த்தங்கள் நிவேதனம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பக்தி வினோத சுவாமி மகராஜின் ஜெகநாதர் திருவிளையாடல்கள் குறித்த சொற்பொழிவு நடந்தது. இதையடுத்து சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாத விருந்து அளிக்கப்பட்டது. அனஸ்வர காலம் துவங்குவதால் தரிசனம் நிறுத்தப்பட்டு, இறைவனுக்கு மூலிகை உணவு வழங்கப்படும். இதையடுத்து வரும் ஜனவரி 4-ம் தேதி நடக்கும் தேர்திருவிழாவின்போது ஜெகநாதர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Related Stories: