போடி, உத்தமபாளையத்தில் ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா

போடி, டிச.30: போடி ஒன்றியத்தில் அதிமுகவினர் விடிய, விடிய வீடு, வீடாக சென்று பணப்பட்டுவாடா செய்தனர்.போடி ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி தலைவர்கள், 48 ஊராட்சி உறுப்பினர்கள், 13 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்காக ஒன்றியத்தில் மொத்தம் 199 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் நேற்றுமுன்தினம் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு முதல் அதிமுகவினர் வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.300 வீதம் விநியோகித்து வருகின்றனர். இதனை தேர்தல் பார்வையாளர்கள் கண்டும், காணாமல் உள்ளனர். நாகலாபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, மல்லிங்காபுரம், டொம்புச்சேரி உள்பட பல்வேறு கிராமங்களில் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. போடி சட்டமன்ற தொகுதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தமபாளையம்உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக மற்றும் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த 10 நாட்களாக பிரசாரம் செய்த கட்சியினர் கடைசி நேரத்தில் தங்களது ஆதரவலைகளை பெருக்கிட பல்வேறு முயற்சிகளை செய்தனர்.

இன்று (30ந்தேதி), தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கு பணம் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், ஒரு சில ஊர்களை தவிர அதிமுகவினர் அனைத்து வாக்காளர்களுக்கும் ரூ.300 முதல் 500 வரை விநியோகம் செய்தனர். தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல்களை தந்தும் யாரையும் பிடிக்கவில்லை. பணம் விநியோகத்தை தடுக்கவும் முடியவில்லை. இதேபோல் பறக்கும் படை என இருந்தும் பணம் விநியோகத்தை தடுக்க முடியவில்லை. இதனால் எந்த தடையும் இல்லாமல் இந்த ஒன்றியத்தில் பணம் தரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே அமமுக கட்சியினர் அதிமுக வாக்குகளை கணிசமாக அளவிற்கு பிரிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவினர் பணம் கொடுத்தும் கலக்கத்தில் உள்ளனர். அதிகாரிகள் பணம் தருபவர்களை பிடிக்காமல் இருப்பதால் இன்று நடக்கக்கூடிய தேர்தலும் முறையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: