குளித்தலை நகராட்சி அண்ணா நகர் 20வது வார்டில் செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

குளித்தலை, டிச. 29: கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அண்ணாநகர் 20வது வார்டு பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலை காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க வந்தனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குளித்தலை நகராட்சி 20வது வார்டு அண்ணா நகரில் ஏராளமானோர் வசித்து வருகிறோம். அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசினர் மாணவர் விடுதி, தனியார் மருத்துவமனை, நகர கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில்செல்போன் டவர் அமைக்க தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது என அறிகிறோம்.

செல்போன் டவர் அமைத்தால் செல்போன் டவரிலிருந்து பரவும் கதிர்வீச்சினால் காது கேட்காமல் போவதற்கும், கண் குருடாவதற்கும், அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலை உள்ளது. அதனால் காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தின் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த புகாரை மாவட்ட ஆட்சி தலைவர், குளித்தலை சார் ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், மாவட்ட எஸ்.பி, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் அனுப்பியுள்ளனர்.

Related Stories: