அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

திருச்சி, டிச. 22: திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும்.இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் அமைப்பினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், சட்டத்தை எதிர்க்கும் கட்சிகளை கண்டித்து நேற்று முன்தினம் திருச்சியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கன்டோன்மெண்ட் போலீசார் திருச்சி மாவட்ட தலைவர் தங்க ராஜய்யன் உள்பட 300 பேர் மீது வழக்குபதிந்தனர்.

அதுபோல் ராமகிருஷ்ணா பாலம் அருகே அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்தேசிய மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் கென்னடி உள்பட 25 பேர் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Related Stories: