கே.என்.நேரு பங்கேற்பு மணப்பாறை அருகே மயில் வேட்டை தேடப்பட்ட 4 பேர் வனத்துறையினரிடம் சிக்கினர்

மணப்பாறை, டிச.22: மணப்பாறை அருகே மயில்களை வேட்டையாடி தலைமறைவான 4 பேர்களை வனத்துறையினர் கைது செய்து, வேட்டைக்கு பயன்படுத்திய 2 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே செவல்பட்டியை சேர்ந்த கோயில் பூசாரி மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் கடந்த 11ம் தேதி மணப்பாறை அருகேயுள்ள மரவனூர் இடையப்பட்டியை சேர்ந்த மூக்கன் மற்றும் கருப்பையா ஆகியோரது தோட்டத்தில் மயில்களை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனிடையே மயில் வேட்டையில் ஈடுபட்டவர்களை சரவணன் தலைமையிலான தனிப்படையை சேர்ந்த வனத்துறையினர் தோட்டத்து உரிமையாளர் கருப்பையா, மூக்கன் மகன் கோபாலகிருஷ்ணன், கோயில் பூசாரி மாரிமுத்து மனைவி அமுதா உள்பட 3 பேரை கடந்த 14ம் தேதி கைது செய்தனர். மேலும் துப்பாக்கியுடன் தலைமறைவான கோயில் பூசாரி மாரிமுத்து உள்பட 6 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவான செவல்பட்டியை சேர்ந்த கோயில் பூசாரி மாரிமுத்து(45), மரவனூர் இடையப்பட்டியை சேர்ந்த மூக்கன்(54) ஆகிய இருவரும் மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டார்.
இந்நிலையில், வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்யவும், எந்தெந்த பகுதிகளில் இதுவரை மயில்கள் வேட்டையாடப்பட்டுள்ளன என கண்டறியவும், சரணடைந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வனத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து ஒரு நாள் மட்டும் வனத்துறை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து பூசாரி மாரிமுத்து மற்றும் மூக்கன் ஆகியோரை காவலில் எடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விங்கம்பட்டியை சேர்ந்த 4 பேருக்கு இந்த மயில் வேட்டையில் தொடர்பு இருப்பதும், மயில் வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கிகள் அங்கு பதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து மாவட்ட வன அதிகாரி சுஜாதா உத்தரவின் பேரில் வனத்துறை தனிப்படையினர் துவரங்குறிச்சி அருகேயுள்ள விங்கம்பட்டிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த குமார்(21), நாகராஜன்(28), அழகன்(23), பொன்னுச்சாமி(35) உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து அவர்கள் மயில் வேட்டைக்கு பயன்படுத்திய 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: