ஓடும் பேருந்தில் திடீர் நெஞ்சுவலி 52 பேரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்

திருவள்ளூர், டிச. 13: திருவள்ளூரில் மாநகர அரசு பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் நடுவழியில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், பயணிகளின் உயிர்களை காப்பாற்றும் எண்ணத்தால் பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூர் வரை தடம் எண், 153ஏ மாநகர அரசு பஸ் இயங்கி வருகிறது. நேற்று காலை 7.30 மணியளவில் இந்த மாநகர அரசு பஸ் திருவள்ளூர் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ்சை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பள்ளிகுளம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சின்னத்தம்பி (41) ஓட்டி வந்தார். திருவள்ளூர் ஆயில்மில் அருகே 52 பயணிகளுடன் வந்தபோது டிரைவர் சின்னத்தம்பி லேசான நெஞ்சுவலி இருப்பதை உணர்ந்தார். இதையடுத்து உடனே ஒரு கையால் நெஞ்சை பிடித்தபடியே இன்னொரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து ஓரமாக பஸ்சை நிறுத்திவிட்டு ஓட்டி வந்த பஸ்சின் இருக்கையிலேயே சாய்ந்து மயங்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தபோது, சிகிச்சை பலனின்றி டிரைவர் சின்னத்தம்பி பரிதாபமாக இறந்தார். இதனால் பஸ்சுக்குள் இருந்த கண்டக்டர் மற்றும் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தனது உயிர்போகும் நேரத்திலும் பயணிகளின் உயிர்களை காக்கும் வகையில் மாநகர அரசு பஸ்சை ஓரமாக நிறுத்திய டிரைவரின் மேன்மையான குணம் குறித்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இந்த சம்பவம் திருவள்ளூர் ஆயில்மில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: