6 குழந்தைகள் உள்பட 7 பேருக்கு டெங்கு

திருப்பூர்,டிச.13:திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரில் பகுதியில் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் திருப்பூரை சேர்ந்த 2 குழந்தைகள் ஒரே நாளில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருப்பூர் மாநகராட்சி 2 மற்றும் 3ம் மண்டலங்களான நல்லூர் மற்றும் ஆண்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது. தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை கூடுதல் இயக்குநர் மருத்துவர் வடிவேல் மற்றும் திருப்பூர் மாவட்ட மருத்துவக்குழுவினர் மாநகராட்சியின் 2 மற்றும் 3ம் மண்டலங்களில் நேற்று ஆய்வு செய்தனர். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பகுதியான 3ம் மண்டலம் சந்திராபுரம் பகுதிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். அப்பகுதியில் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் பொது சுகாதார துறை இயக்குநர் கூறுகையில், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.  முதலிபாளையம் ஹவுசிங்யூனிட்டை சேர்ந்த 20 வயது வாலிபர், 10 மற்றும் 9 வயதுள்ள தலா 3 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகள் டெங்கு காய்ச்சலுக்கு தற்போது வரை சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்கள் திருமலைநகர், பெரிச்சிபாளையம், நாச்சிபாளையம், பாண்டியன்நகர், ராஜீவ்காந்திநகர் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொது சுகாதார துறை இயக்குநர் தெரிவித்தார்.

Related Stories: