தென்காசியில் அசுர வேகத்தில் பாயும் வாகனங்களால் தொடரும் விபத்துகள் வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தென்காசி, டிச. 12: தென்காசி நகர பகுதியில் சீறிப்பாயும் வாகனங்களால் தினமும் சிறு சிறு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட தலைநகரான தென்காசியில் ஒரே ஒரு ரோடு மட்டுமே பிரதான போக்குவரத்து சாலையாக பயன்படுகிறது. ஆசாத்நகர் சிற்றாறு பாலம் பகுதியில் துவங்கி குத்துக்கல்வலசை வரை நீண்டுள்ள இந்த ஒரு ரோட்டை நம்பியே போக்குவரத்து உள்ளது. இதனால் இந்த சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. இதனால் பிரதான சாலையில் இணையும் நகர்ப்புற இணைப்பு சாலைகளிலும் அதிக வாகன போக்குவரத்து காணப்படுகிறது.
Advertising
Advertising

 இந்த சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கின்றன. இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கடும் வேகத்தில் பயணிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி பஜார்களில் உள்ள சந்திப்புகளில் அடிக்கடி விபத்து நடக்கிறது. சுவாமி சன்னதியில் இருந்து பூக்கடை இறக்கம் வழியாக அம்மன் சன்னதி சந்திப்பிலும், நெல்லை சாலை சந்திப்பிலும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 முதல் நான்கு விபத்துகள் நடக்கிறது.

மேலும் தெற்குமாசி வீதியில் இருந்து தலைமை தபால் நிலையம் வரும் சாலையிலும் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பெருமாள் கோயில் அருகே உள்ள சிக்னல் கிடைத்ததும் வாகனங்கள் அதிவேகமாக புறப்பட்டு செல்கின்றன. பரதன் தியேட்டர் பஸ் நிறுத்தம் முன்புள்ள சாலை சந்திப்பில், கோயில் வாசல் பகுதிக்கு திரும்பும் வாகனங்களும், பழைய பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பஸ் ஏற காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எப்பொழுது எந்த வாகனம் மோதுமோ என்ற அச்சத்தோடே காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதனை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் சாலைகளில் தேவைப்படும் இடங்களில் வேகத்தடைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் பஜார் பகுதிகளில் அதிக வேகத்துடன் இருசக்கர வாகனங்களை இயக்குவதையும், விபத்துகளையும் தவிர்க்க முடியும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: