தா.பழூர் அருகே சிலால் கிராமத்தில் பேருந்து நின்று செல்லாததால் கண்ணாடி உடைப்பு

தா.பழூர், டிச. 12: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் இருந்து கும்பகோணம் செல்வதற்கு சிலால் சுற்றுவட்டார பகுதிகளான தேவமங்கலம், உதயநத்தம், கழுவந்தோண்டி, உத்திரக்குடி, வானதிரையன்பட்டினம், நாயகனைப்பிரியாள், உடையார்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கும்பகோணம் மற்றும் தஞ்சை பகுதி கல்லூரி மற்றும் பள்ளி செல்வதற்காக மாணவர்கள் சிலால் 4 ரோட்டில் வேளை நாட்களில் தினமும் 500க்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பேருந்துக்காக காலை 7 முதல் 9 மணி வரை காத்திருக்கின்றனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் பயண அட்டை பயன்படுத்தும் மாணவர்கள்.

இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து காலை 7.40 மணிக்கு அரசு பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி வந்தது. சிலால் அருகே வந்தபோது மாணவர்கள் பஸ்சை நிறுத்தினர். இருப்பினும் பஸ்சை நிறுத்தாமலும், சிலால் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவர்கள் மீது மோதுவதுபோல் டிரைவர் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை பெரிய மரக்கட்டையால் அடித்து உடைத்துவிட்டு தப்பியோடினர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் தா.பழூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக மாணவர்களிடம் விசாரித்தனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கூறும்போது, ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கும்பகோணம் செல்ல அரசு பேருந்தை நம்பியே உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் பேருந்து பயண அட்டை பயன்படுத்துவதால் பேருந்துகள் நிற்காமல் செல்கின்றன. இதனால் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருப்பினும் இவ்வழியாக வரும் அரசு பேருந்துகள் எதுவும் நிற்காமல் செல்கிறது. எனவே இந்த வழித்தடத்தில் பள்ளி, கல்லூரி நேரத்தில் கூடுதலாக 2 பஸ்களை இயக்க வேண்டும் அல்லது அனைத்து பஸ்களிலும் மாணவர்கள் பயண அட்டை உரிமத்தை ஏற்று கொண்டு கும்பகோணம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.

காலை நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க ஆண்டுகணக்கில் மனுக்கள் அளித்தும், பலமுறை சாலை மறியல் செய்தும் தமிழக அரசும் ,மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

குடைபிடித்தபடி ஆடு மேய்க்கும் மூதாட்டி

Related Stories: