கள்ளத்தொடர்பு விவகாரம் தச்சு தொழிலாளியை எரித்து கொன்ற 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

பூந்தமல்லி,  டிச. 12: சென்னை மதுரவாயல் அடுத்த நெற்குன்றம், வடவள்ளி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன் (35) தச்சு தொழிலாளி. கடந்த 2014ம் ஆண்டு மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில்  ஜெகன்நாதன்  கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.  இவரை சிலர் வெட்டி கொலை செய்து, சடலத்தை எரித்ததாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று கருகிய நிலையில் கிடந்த ஜெகன்நாதனின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த முருகன் (44), சத்யராஜ் (30), சதீஷ் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.  விசாரணையில், முருகனின் மனைவியுடன் ஜெகன்நாதனுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பலமுறை எச்சரித்தும் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் முருகன்,   தனது உறவினர்களான சத்யராஜ், சதீஷ் ஆகியோருடன் சேர்ந்து ஜெகன்நாதனை சம்பத்தன்று மது அருந்த அழைத்துச் சென்று, அரிவாளால் வெட்டி கொலை செய்ததும். பின்னர், அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி சடலத்தை தீ வைத்து எரித்து விட்டு தப்பியதும் தெரிய வந்தது.

இதையடுத்து முருகன் உள்பட மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2ல்  நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி,  இந்த வழக்கில்  முருகன், சத்யராஜ், சதீஷ் ஆகிய 3 பேர் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 7 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எம்.கருணாகரன் ஆஜராகி வாதாடினார்.

Related Stories: