எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பணப்பயன் கிடைக்காமல் ஊழியர்கள் அவதி

திருவொற்றியூர், டிச. 11: எண்ணூர் அனல் மின்நிலையம் சுமார் 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதில், 5 அலகுகளுடன்  420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில்  பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து இங்கு செயல்பட்டு வந்த அலகுகள் பழுதடைந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக ஐந்து அலகுகளும் மூடப்பட்டு இங்கு பணியாற்றிய 470 ஊழியர்களை இருபிரிவாக பிரிக்கப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1 மற்றும் 2 ஆகிய பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான சம்பளம் மற்றும் பணப்பயன்கள் எண்ணூர் அனல்மின் நிலையத்திலேயே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அவசர தேவைக்காக தொழிலாளர்கள் பெறும் வருங்கால வைப்புநிதி கடன் மற்றும் ஈடுகட்டும் விடுப்பு சரண்டர் ஆகிய பணப் பயன்கள் பலமாதங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

தலைமை அலுவலகத்திலிருந்து எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிதி வராதது இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு கடன் வழங்காமலேயே அதற்கான தவணைத் தொகையை சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  எனவே கடன் மற்றும் பணப் பயன்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.அவ்வாறு வழங்கப்படவில்லை என்றால் எண்ணூர் அனல் மின் நிலைய அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: