திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் துவக்கம்

திருச்சி, டிச.10: திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் மொத்தம் 4,077 உள்ளாட்சி பதவிகளுக்கு மொத்தம் 140 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி ேதர்தல் வருகிற டிசம்பர் 27ம்தேதி மற்றும் டிசம்பர் 30ம்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளான அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பர் 27ம் தேதியும், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பர் 30ம் தேதியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 241 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 404 கிராம பஞ்சாயத்து தலைவர், 3,408 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என மொத்தம் 4,077 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்புமனு பெறும் பணி நேற்று துவங்கியது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர், இட ஒதுக்கீட்டை முழுமையாக முடித்த பிறகு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்துள்ளன. இந்த மனு மீது நாளை விசாரணை நடக்கிறது. இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சார்பில் நேற்று யாரும் வேட்புமனு வாங்க வரவில்லை. ஆனால் முக்கிய கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பலரும் பஞ்சாயத்துகளில் சுயேட்சையாக போட்டியிட பல இடங்களில் வேட்புமனுக்கள் வாங்கி உள்ளனர்.

மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் ஓலையூரை சேர்ந்த அகிலா இளங்கோவன் என்பவர் முடிகண்டம் பஞ்சாயத்தில் போட்டியிட வேட்புமனு வாங்கினார். 14 ஒன்றியங்களில் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக 13 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 127 பேரும் என மொத்தம் 140 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருச்சி கலெக்டர் சிவராசு மணப்பாறை, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் வேட்புமனு வழங்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

Related Stories: