உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்கள் விநியோகம்

உடுமலை,டிச.10:ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்கள் ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் வரும் 30-ம்தேதி உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சி தலைவர், குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சி தலைவர், மடத்துக்குளம் ஒன்றியத்தில் 11 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இப்பதவிகளுக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் நேற்று (9-ம்தேதி) துவங்கியது. ஒன்றிய அலுவலகளில் உள்ள தேர்தல்பிரிவு அலுவலகத்தில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. தேர்தல் அலுவலரான வட்டார வளர்ச்சி அலுவலர் விண்ணப்பங்களை வழங்கினார். இதை ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஊராட்சி அலுவலகங்களில், வார்டு உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை ஊராட்சி செயலர் வழங்கினார். வரும் 16-ம்தேதி வரை வேட்பு மனுக்களை அளிக்கலாம். 17-ம்தேதி மனுக்கள் பரிசீலனை, 19-ம்தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசிநாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, மூன்று ஒன்றியங்களிலும் வரும் 30-ம்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம்தேதி நடக்கிறது.

Related Stories: