தம்மம்பட்டியில் தொடர் மழை சுவேத நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

தம்மம்பட்டி, டிச.3: தம்மம்பட்டி சுவதே நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் திடீர் மறியலுக்கு முயன்றனர். தம்மம்பட்டியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சுவேத நதிக்கு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் உருவாகும் வரட்டாறு, பெரியாறு மற்றும் முள்ளுக்குறிச்சி ஆறுகளின் இணைப்போடு சுவேத நதி உருவாகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நேற்று சுவேத நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து செந்தாரப்பட்டி ஏரியில் உள்ள மதகு திறந்து விடப்பட்டது. இதனால் செந்தாரப்பட்டி மற்றும் பெருமாள் கோயில், கோனேரிப்பட்டியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தன. அப்பகுதி மக்கள் மதகு பகுதிக்கு வந்து பார்த்த போது, அங்கு அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. அதை கண்ட பொதுமக்கள் மதகை மூட முயன்றனர். ஆனால், அங்கு 40 பேர் காவலுக்கு இருந்தனர். அவர்களிடம் கேட்டபோது, மதகுக்கு காவல் இருப்பதாக தெரிவித்தனர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், மதகை மூட வலியுறுத்தி சாலை மறியலுக்கு முயன்றனர். இதையறிந்த கோனேரிப்பட்டி விஏஓ விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழையாமல் இருக்க, மணல் மூட்டைகளை கொண்டு தண்ணீரை தடுக்கவும், மதகு வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்கவும் உடனடியாக உத்தரவிட்டார். இதனால், குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வருவது குறைந்தது. இதனை தொடர்ந்து மறியலுக்கு முயன்றவர்கள் கலைந்து சென்றனர். 

Related Stories: