பட்டுக்கூடு அங்காடியில் ஏலம் பட்டு நூல் விலை கிலோவுக்கு ரூ.135 உயர்வு

கோவை, டிச.3: கோவை பட்டுக்கூடு அங்காடி மையத்தில் நடந்த ஏலத்தில் பட்டுநூல் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.135 அதிகரித்தது. பட்டு விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் மகசூலாகும் பட்டுக்கூடுகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடிக்கு சென்று விற்பனை செய்வது வழக்கம். கோவையில் பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. பட்டுக்கூடு அங்காடிக்கு வரும் நூற்பாளர்கள் விவசாயிகளிடம் இருந்து கூடுகளை வாங்கி பட்டுநூலாக திரித்து காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பட்டுநூல் பரிமாற்றகத்திற்கு விற்பனைக்கு வழங்குவர். இந்த பட்டு நூல்கள் ஏலம் முறைப்படி நெசவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பட்டாடைகள் தயாரிக்கப்படுகிறது.நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ பட்டுநூல் ரூ.3098க்கு விற்பனையானது. கடந்த வார ஏலத்தில் ஒருகிலோ பட்டுநூல் ரூ.2963க்கு ஏலம் போன நிலையில் இந்த வாரம் கிலோவுக்கு 135 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. அதேபோல பட்டுக்கூடு ஏலத்திற்கு 21 விவசாயிகள் வந்திருந்தனர். 1453.700 கிலோ பட்டுக்கூடுகள் ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்து 93க்கு ஏலம் போனது. அதிகபட்சமாக ரூ.409க்கும், குறைந்தபட்சமாக ரூ.285க்கும், சராசரியாக ரூ.340.57க்கும் விற்பனையானது.

Related Stories: