கெங்கவல்லி அருகே வாய்க்கால் தண்ணீரை மறித்ததை கண்டித்து முற்றுகை

கெங்கவல்லி, டிச.1: கெங்கவல்லி அருகே வாய்க்காலில் வந்த தண்ணீர் தடுத்து நிறுத்தியதை கண்டித்து போலீஸ் ஸ்டேஷனை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், கொல்லிமலை அடிவாரத்திலிருந்தும், வலசக்கல்பட்டி ஏரியில் இருந்தும் வாய்க்கால் மூலமாக வரும் தண்ணீரை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்து வந்தனர். ஆனால், சுமார் 5 வருடமாக வாய்க்கால் காய்ந்து கிடந்த நிலையில், தொடர் மழையால் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கிராம மக்கள் ₹2 லட்சம் பணம் வசூலித்து வாய்க்காலை தூர் வாரி சாகுபடி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், கெங்கவல்லி அருகே கடம்பூர் செம்படவர்குட்டையில், நடுவலூருக்கு வாய்க்கால் மூலமாக செல்லும் தண்ணீரை தடுத்து, அங்குள்ள குட்டையில் சேமித்து வருகின்றனர். இதனால், நடுவலூர் வாய்க்காலில் தண்ணீர் வராததால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து நேற்று நடுவலூர் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் கெங்கவல்லி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமாண்டவர், எஸ்ஐ முருகேசன் ஆகியோர் விசாரித்தனர். மேலும், ஆத்தூரில் இருந்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலகுமரன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கடந்த 1911ம் ஆண்டு முதல் கால்வாயில் வரக்கூடிய தண்ணீரை பயன்படுத்த நடுவலூர் விவசாயிகள் உரிமம் பெற்றுள்ளனர். எனவே, அதனை தடுத்து நிறுத்துவது விதி மீறிய செயல் என தெரிவித்தார். எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். இதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, பொக்லைன் கொண்டு தடுப்பு அகற்றப்பட்டது. இதனால், நடுவலூர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: