ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 30 யானைகள் முகாம்

ஓசூர், டிச.1: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 30 யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராகி, நெல் அறுவடையையொட்டி 100க்கும் மேற்பட்ட யானைகள் வருவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் நேற்று முன்தினம் இரவு 30 யானைகள் வந்துள்ளதால், சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், போடூர், பேரண்டபள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வனப்பகுதிக்கு விறகு எடுக்கவோ, கால்நடை மேய்க்கவோ செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று காலை தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் வனத்தை நோக்கி புதிதாக 15 யானைகள் வந்துள்ளது. தேன்கனிக்கோட்டை பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் ஓசூர் சானமாவுக்கு படையயெடுக்கும் அபாயம் உள்ளதால், யானைகளை கண்காணித்து விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: