மும்பையிலிருந்து கோவை வந்த ரயிலின் கழிவறையில் மூதாட்டி சடலம்

கோவை, நவ.28:  மும்பையில் இருந்து புறப்பட்ட   குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்திற்கு வந்தது.  அப்போது முன்பதிவு பெட்டியான எஸ்-3  பெட்டியில் இருந்த கழிவறை  உட்பக்கமாக  தாழிடப்பட்டிருந்தது.  நீண்ட  நேரம் தட்டியும் திறக்கவில்லை.  இது குறித்து துப்புரவு ஊழியர்கள் நிலைய  மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து கோவை ரயில்வே  போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கழிவறையில் ஒரு  பெண் பிணமாக கிடந்தார். அவர் வைத்திருந்த பேக்கை  எடுத்து பார்த்தபோது  அதில்  அடையாள அட்டை இருந்தது.

அதில் குஜராத் மாநிலம்  வல்சாத்தை சேர்ந்த கதம்சரளா பென் (69)  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  விசாரணையில், குன்னூரில் வசிக்கும் தனது தங்கை சதாமி வீட்டுக்கு செல்வதற்காக அவர் தனியாக வந்ததும்,  நள்ளிரவு  நேரத்தில் கழிப்பறைக்கு சென்றபோது அவருக்கு திடீர்  மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக அவருடைய உறவினர்களுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: