கொங்கு பொறியியல் கல்லூரியில் ‘டேலண்ட் ஷோ 2019’ திறனாய்வு போட்டி

ஈரோடு, நவ.26: பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான ‘டேலண்ட் ஷோ 2019’ திறனாய்வு போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. கொங்கு பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மெய்ப்பிக்கும் வகையில் போட்டிகளும், தொழில்நுட்ப அறிவு சார்ந்த போட்டிகளும், கலை மற்றும் கலாசாரம் சார்ந்த போட்டிகளும்,  அறிவியல் கண்காட்சியும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.இப்போட்டியில் மொத்தம் 364 பள்ளிகளை சேர்ந்த 2,226 மாணவ, மாணவிகள் மற்றும் குழுக்கள் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். மொத்தம் 2,949 மாணவ, மாணவிகள் கல்லூரியின் பல்வேறு துறைகளில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.இதன் நிறைவு விழா நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள கொங்கு பல்கலை மையத்தில் நடந்தது.  இதில் சுங்கம் மற்றும் மத்திய கலால்த்துறை அதிகாரி சரவணன், ஈரோடு மாவட்ட தலைமை கல்வி அதிகாரி பாலமுரளி, ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

 இதன்படி முதல் பரிசு ரூ.2,500ம், இரண்டாம் பரிசாக ரூ.1,500ம், மூன்றாம் பரிசாக ரூ.1000மும் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சம்பியனாக ஈரோடு பி.வி.பி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பெருந்துறை சாகர் இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாமிடமும், ஈரோடு யூ.ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன. விழாவில், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் சச்சிதானந்தன் வரவேற்று பேசினார். கொங்குவேளாளர் தொழில் நுட்ப அறக்கட்டளை தலைவர் முத்துசாமி தலைமையுரையாற்றினார்.செயலாளர்  பழனிசாமி சிறப்புரை ஆற்றினார். முதன்மையர் செந்தில் வேல்முருகன் நிகழ்ச்சி பற்றி எடுத்து கூறினார். விழாவின் இறுதியில் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி நன்றி கூறினார். விழாவில் கொங்குவேளாளர் தொழில் நுட்ப அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: