“எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்

 

ஈரோடு, ஜூன் 2: எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின் கீழ் நாளை 3ம் தேதி முதல் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தன்சுத்தம், பள்ளி வளாகத்தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், நெகிழி பயன்பாட்டை குறைத்தல், பள்ளி காய்கறித்தோட்டம் அமைத்தல் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தின் சிறப்பு செயல்பாடாக நாளை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை பள்ளிகளில் சிறப்பு தூய்மை பணி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம், தன்னார்வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகள், பள்ளி வளாகம், மதிய உணவு திட்ட சமையல் அறை, மாணவர்கள் உணவருந்தும் இடம் ஆகிய இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்க வேண்டும். தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார வளமேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: