ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் அமைச்சர் திறந்து வைத்த இதயநோய் பிரிவு செயல்படவில்லை கலெக்டரிடம் புகார்

நாகர்கோவில், நவ.26:  அமைச்சர் திறந்து வைத்த இதய நோய் பிரிவு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செயல்படவில்லை என்று கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குமரி மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இருதய நோயினால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ளனர். இங்கு இருதய நோய் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இருதய ரத்தநாள அடைப்பை நீக்கும் சிகிச்சை பிரிவு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரால் கடந்த ஒரு மாதம் முன்பு தொடங்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக ‘கேத் லேப்’ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு பரிசோதனை எதுவுமின்றி மருந்து, மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்புகின்றனர். இது மக்களுக்கு அரசு மருத்துவமனை மீது உள்ள நம்பிக்கையை இழக்க வைக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவை உரிய மருத்துவர்களுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: