சுவாச கோளாறால் பாதிப்பு ஆண்டுக்கு 500 பச்சிளங்குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு சிகிச்சை

திருச்சி, நவ.22: சுசாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் கூறினார். சுகாதாரத்துறை சார்பில் பச்சிளங்குழந்தைகள் வாரமாக இந்த வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பச்சிளங் குழந்தை வாரம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்டுதோறும் 4 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertising
Advertising

இவர்களில் 750 கர்ப்பிணி தாய்மார்கள் ஹை ரிஸ்க் மதராக (அதிகபட்ச நோய் பிரச்னைக்கு உரியவர்கள்) வருகிறார்கள். இவர்களுக்கும் உரிய சிகிச்சை அளித்து அவர்களில் 98 சதவீதம் பேருக்கு சுகப்பிரசவம் நடக்கும்படி தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் வருடத்தில் 500 பேருக்கு சுவாச கோளாறு கண்டறியப்பட்டு அவர்களுக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1.5 கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு நியூமோகாக்சில் என்ற ஊசி போடப்படுகிறது. இந்த ஒரு ஊசி மருந்தின் விலை 4 ஆயிரம் ரூபாய். அதை இலவசமாக போடுகிறோம்.

பச்சிளங்குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை வீடுகளுக்கு அனுப்புகிறோம். வீடுகளுக்கு சென்ற பின்னரும் அவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கிறோம். அனைத்து மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பச்சிளங்குழந்தை துறைத் தலைவர் டாக்டர் செந்தில்குமார், குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் சிராஜூதீன் உள்ளிட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.

Related Stories: