தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் அணி சாம்பியன்

கோவை, நவ. 22: தேசிய அளவில் நடந்த சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில்  சாம்பியன் பட்டம் வென்ற சச்சிதானந்த ஜோதி நிகேதன் மாணவிகள் அமைச்சர் வேலுமணியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தேசிய அளவில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி, டாக்டர் அம்ரிட் லால் இஸ்ரத் நினைவு சன்பீம் பள்ளியில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி,  17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பங்கேற்றது. தகுதி சுற்று, காலிறுதி, அரையிறுதி போட்டிகள் முடிந்து, இறுதிப்போட்டி நடந்தது. இதில், கர்நாடக மாநிலம் குடகு பாரதிய வித்யாபவன் பள்ளி அணியும், சச்சிதானந்த ஜோதி நிகேதன் அணியும் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. இப்போட்டியில் சாதனை படைத்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி மாணவிகளை,  தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, பாராட்டு தெரிவித்தார். அப்போது, கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பள்ளி செயலர் கவிதாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: