முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.85.65 லட்சம் நலத்திட்ட உதவி

ஈரோடு, நவ.22: முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின்கீழ் நேற்று ஈரோட்டில் நடந்த விழாவில் 542 பயனாளிகளுக்கு ரூ.85.65 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர்.முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின்கீழ் ஈரோடு  கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மல்லிகை அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பேசுகையில்,`தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகாவிலும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர்க்கும் முகாம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 542 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதுபோன்ற முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்’ என்றார்.

விழாவில் முதியோர் உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, பட்டா மாறதல், இலவச வீட்டுமனை திட்டம், இலவச தையல் இயந்திரம், சலவை பெட்டிகள் என 542 பயனாளிகளுக்கு 85 லட்சத்து 65 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் தென்னரசு, ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர்.இந் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: