காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்தவர் படுகாயம்

பந்தலூர், நவ. 19 : பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி செவியோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி  மேத்யூஜார்ஜ்(44). இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து சேரம்பாடி பஜாருக்கு பைக்கில் வந்தபோது செவியோடு அருகில் மூன்று காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது. பைக்கில் சென்றவரை துரத்தியதில் அவர் பைக்கை கீழே போட்டுவிட்டு யானையிடமிருந்து தப்பித்துக்கொள்ள ஓடியதில் கீழே விழுந்து கால் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடைய சத்தம் கேட்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள் யானையை சத்தமிட்டு துரத்தி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.   

சம்பவம் இடத்திற்கு வந்த சேரம்பாடி ரேஞ்சர்(பொறுப்பு) கணேசன், வனகாப்பாளர் ராபர்ட்வில்சன் மற்றும் வனத்துறையினர் மேத்யூ ஜார்ஜை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பைக்கில் பயணம் செய்யும்போது நிதானமாக செல்லவேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: