சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பணம் பறித்த போலி டிடிஆர் அதிரடி கைது

சென்னை, நவ.19: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் போல் நடித்து, பயணிகளிடம் பணம் பறித்து வந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்து, போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்தனர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று ரயில்வே இன்ஸ்பெக்டர் தாமஸ் ஏசுதாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக ஒருவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபடுவதை கவனித்தனர்.இதையடுத்து அந்த நபரிடம் சென்று விசாரணை செய்தனர். அப்போது அவர் தான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (44) என்றும், ரயில்வே ஊழியர் என்றும் தெரிவித்தார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.மேலும், இதுதொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, சதீஷ்குமார் ரயில்வே ஊழியர் இல்லை என்பதும், போலியான அடையாள அட்டை வைத்துக் கொண்டு பயணிகளிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், சதீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: