பெரிய ஆலங்குளம் அரசுப்பள்ளிக்கு பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு

திருப்பரங்குன்றம், நவ.13:  தினகரன் செய்தி எதிரொலியால் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பெரிய ஆலங்குளம் அரசுப்பள்ளிக்கு பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது பெரிய ஆலங்குளம். இங்கு செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சென்று வர முறையான சாலை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் தற்காலிக பாதையில் சென்று வருகின்றனர். இந்த தற்காலிக பாதையானது வயல் வெளிகள் மற்றும் முட்புதர்கள் வழியாக செல்கின்றது. மேலும் இந்த பாதையில் பெரும்பகுதி பட்டா நிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி செல்ல பாதை இல்லாததால் இந்த நிலங்களின் உரிமையாளர்கள் ஆட்சோபனை தெரிவிக்காததால் வயல்வெளிகளின் ஊடே நடந்து சென்றனர். இதனால் மழை காலங்களில் மாணவர்கள் மிகுந்த அவதியுறுவதாக குற்றம்சாட்டு எழுந்தது.

Advertising
Advertising

இது குறித்து நேற்றைய தினகரனில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து  மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலக ஆணையாளர் சோனாபாய் இடத்தை ஆய்வு செய்தார். பின்னர் வலையங்குளம் வருவாய் வட்ட சர்வேயர் கீதா தலைமையில் விஏஓ மனோஜ், ஊராட்சி செயலர் பழனி, உதவியாளர் மருதுபாண்டியன் ஆகியோர் திருப்பரங்குன்றம்-ஆலங்குளம் சாலையில் இருந்து பள்ளி வரை அரசுக்கு சொந்தமான் இடத்தில் சாலை அமைப்பதற்கான தூரத்தை அளவீடு செய்து 20 அடி அகலமும், சுமார் 300 மீட்டர் நீளமும் கொண்ட சாலைக்கான வரைபடம் தயாரிக்கும் பணி துவங்கியது. இதனைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதங்களில் பள்ளிக்கான சாலை பணிகள் நிறைவடையும் என அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சாலை அமைக்க உத்தரவிட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: