பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல்சாகுபடி பணிகள் தாமதம்

தூத்துக்குடி, நவ.8:தாமிரபரணி பாசனத்தில் பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் பிசான நெல்பயிர் சாகுபடி பணிகள் தாமதமாகி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. மாவட்டத்தின் வடபகுதிகளில் மானாவாரி பயிர் சாகுபடியும், தென்பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் பாசனத்தை நம்பி நெல், வாழை, வெற்றிலை, தென்னை போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயம், விவசாயத்தொழிலை நம்பி மாவட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யாததால் பயிர் சாகுபடி முடங்கியது. இந்நிலையில், இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பெரும்பாலான குளம், குட்டைகள் நிரம்பியுள்ளது. மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டப்பயிறு, எள், கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம், கம்பு, மாட்டுச்சோளம் போன்றவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

 தாமிரபரணி பாசனப்பகுதிகளில் பிசான நெல்சாகுபடி செய்வதற்கு அரசால் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி அடிப்படையில் மருதூர் அணையின் மேலக்கால், கீழக்கால், வைகுண்டம் அணையின் வடகால்,தென்கால் பாசனத்தில் மொத்தம் 46,107 ஏக்கரில் பிசான நெல்சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால்  தாமிரபரணி பாசனத்தில் பிசான நெல்சாகுபடி பணிகளை துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் அளித்துள்ளது.  கோடைகாலத்தில் மேற்கொள்ளவேண்டிய குளங்கள்  பராமரிப்பு, பாசனக்கால்வாய்களை தூர்வாருதல், பழுதான மடைகள் மற்றும் கரைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை பொதுப்பணித்துறையினர் சரியாக மேற்கொள்ளவில்லை.  பராமரிப்பு பணிகளை தாமதமாக மேற்கொண்டு வருவதால் சில பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளால் பாசன வாய்க்கால்கள், குளங்களுக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் வீணாகும் அவலநிலையும் நிலவுகிறது.

குறிப்பாக மருதூர் கீழக்கால் பாசன வாய்க்கால் மூலமாக பட்டர்குளம், செந்திலாம்பண்ணை குளம், பத்மநாபமங்கலம் குளம், வைகுண்டம் குளம், பேரூர் குளம், சிவகளை, பெருங்குளம் என மொத்தம் 15குளங்கள் நீர்வரத்து பெறுகிறது. தற்போது கீழக்கால் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் மடைகளை சீரமைத்து புதிதாக கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.  இந்தப்பணிகளால் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் நிலவுவதால் 15குளங்களும் தண்ணீரின்றி கிடக்கிறது. குளங்கள் பருவமழையில்  நிரம்பினால்தான் இப்பகுதிகளில் பிசான நெல்சாகுபடி பணிகளை துவங்கமுடியும். தொடர்ந்து தாமதமாகி வரும் பராமரிப்பு பணிகளால் கீழக்கால் பாசனத்தில் நெல்சாகுபடிக்கான ஆயத்தப்பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் வயல்கள் தரிசாக கிடக்கிறது. இதுபோன்று வைகுண்டத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாசனக்கால்வாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாய பணிகள் தாமதமாகி வருகிறது. பிசான நெல்சாகுபடி பணிகளை துரிதமாக துவங்கிட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மருதூர், வைகுண்டம் அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லப்படும் வாய்க்கால்கள், குளங்களில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை துரிதமாக முடித்திடவேண்டும். நெல்பயிர் நடவு நேரத்தில் தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: