மாநில அளவிலான கைப்பந்து போட்டி பெரியார், பாரதிதாசன் பல்கலை அணிகள் சாம்பியன்

ஓமலூர், நவ.7: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், பெண்கள் பிரிவில் பெரியார் பல்கலைக்கழக அணியும், ஆண்கள் பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அணியும் முதலிடம் பிடித்தனர். ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவில் பல்கலைக்கழக அணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் நடந்தது. ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணி, சென்னை அண்ணா பல்கலைக்கழக அணியை 29-23 என்ற கோல் கணக்கில் வென்றது. இதே பிரிவில், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி 3ம் இடம், கோவை கற்பகம் பல்கலைக்கழக அணி 4ம் இடம் பிடித்தன. மகளிர் பிரிவு போட்டியில், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி சென்னை அண்ணா பல்கலைக்கழக அணியை 23-12 என்ற கோல் கணக்கில் வென்றது. இதே பிரிவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி 3ம் இடம், சென்னை பல்கலைக்கழக அணி 4ம் இடம் பிடித்தன.

Advertising
Advertising

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில், இரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகளுக்கு தலா 1.40 லட்சம், 2ம் இடம் பிடித்த அணிகளுக்கு 1.05 லட்சம், 3ம் இடம் பிடித்த அணிகளுக்கு 70 ஆயிரம் வழங்கப்பட்டன. முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் வழங்கினார். நிகழ்ச்சியில், பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் வெங்கடாசலம், போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: