சாதி சான்று கேட்டு குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, நவ.7: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று எஸ்டி சாதி சான்று கேட்டு குடுகுடுப்பைக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று, ஆரணி, அய்யம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்த இந்து கணிக்கர் (குடுகுடுப்பைக்காரர்கள்) சமூகத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எஸ்டி சாதி சான்று கேட்டு குடுகுடுப்பை அடித்து கோஷமிட்டனர்.இதுகுறித்து சங்க மாவட்ட தலைவர் ராஜாமணி, செயலாளர் பொன்னுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:ஆரணி பள்ளிக்கூடத்தெருவில் 54 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300 பேர் வசித்து வருகிறோம். எஸ்டி சாதி சான்று கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

Advertising
Advertising

இந்த சாதி சான்று வேலூர், காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைத்து விட்டது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. சாதி சான்றிதழ் இல்லாததால் எங்களது குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைக்க முடியவில்லை. இதில் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி எங்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த உண்ணாவிரதத்தையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குடுகுடுப்பைக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.(கேப்சன்)எஸ்டி சாதி சான்று கேட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட குடுகுடுப்பைக்காரர்கள்.

Related Stories: