களக்காடு, நவ. 5: திருக்குறுங்குடி குளத்தில் மடையில் ஏற்பட்ட பழுது சீர் செய்யப்படாததால் குளத்து கரையில் மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் தென்காசி - நாகர்கோவில் பிரதான சாலையில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 500ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த ஜூன் மாதம் பெய்த மழையினால் குளம் நிரம்பியது. அதன் பின் விவசாய பணிகளுக்கு மடைகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனிடையே குளத்தின் நடு மடை அருகே நேற்று திடீரென மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மடை அருகே நீர்கசிவு ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. இதனால் குளம் உடையும் அபாய நிலை ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், குளத்தின் கரையில் ஏற்பட்ட மண் அரிப்பை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ராஜேந்திரன், டோனாவூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் நம்பி, நகரச் செயலாளர்கள் களக்காடு செல்வராஜ், திருக்குறுங்குடி முருகன் மற்றும் பொதுப்பணித்துறையினர் பங்கேற்றர்.
