சீரான குடிநீரை விநியோகிக்க கோரி திருப்பூர் மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர், நவ.5: சீரான குடிநீர் விநியோகிக்க கோரி, திருப்பூர் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக்குடிநீர் குழாய் உள்ளது. 24 மணி நேரமும் விநியோகம் செய்யப்படும் இக்குடிநீர் குழாயில், முதலாம் திட்ட குடிநீரும், வீடுகளுக்கு 2-ம் திட்ட குடிநீரும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் 2-ம் திட்ட குடிநீர் சுவை இல்லாமல் இருக்கும். இதனால் பெரும்பாலான மக்கள் பொதுக்குடிநீரில் விநியோகம் செய்யப்படும் முதலாம் திட்ட குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக முதலாம் திட்ட குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காசு கொடுத்து கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நிறுத்தப்பட்டுள்ள முதலாம் திட்ட குடிநீரை வழங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் இல்லாத நிலையில், அலுவலர் முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது, வரும் வெள்ளிக்கிழமைக்குள் முதலாம் திட்ட குடிநீர் விநியோகத்தைச் சீர்செய்யாவிட்டால், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்தனர். இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேலம்பாளையம் நகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கராஜ்,  மாவட்டக்குழு உறுப்பினர் நந்தகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: