மாநில ஜூனியர் வாள் விளையாட்டு போட்டி குமரி மாவட்ட அணி சாம்பியன்

குலசேகரம்,நவ.4: குமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகமும், ஆற்றூர்  மரியா பொறியியல்  கல்லூரியும் இணைந்து  மாநில அளவிலான 27வது ஜூனியர் வாள் விளையாட்டு  போட்டிகளை நடத்தியது.  மரியா பொறியியல் கல்லூரியில் 2 நாட்கள் போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் குமரி மாவட்ட ஆண்கள்   அணியினர் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றனர். நாமக்கல்   அணியினர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். பெண்கள் பிரிவில் நாமக்கல் அணி முதல்   இடமும், சென்னை அணி இரண்டாம் இடமும் பிடித்தது. குமரி மாவட்டத்தை சேர்ந்த 3   ஆண்கள், 3 பெண்கள் என 6 பேர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெறும்  தமிழக  அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஜூனியர் வாள் விளையாட்டு  போட்டிகள் போபாலில் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

 நிறைவு நாள் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மாநில  வாள் விளையாட்டு கழக  தலைவர் ஜாண் நிக்கல்சன் தலைமை வகித்தார். மாவட்ட வாள்  விளையாட்டு கழக தலைவர் சிந்துகுமார், மரியா பொறியியல் கல்லூரி முதல்வர்  டாக்டர் சுஜர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மாவட்ட வாள் விளையாட்டு  கழக செயலாளர் அமிர்தராஜ் வரவேற்றார்.  மரியா கல்வி குழுமத்தின்  தலைவர் டாக்டர் ரசல்ராஜ், மாநில வாள் விளையாட்டு கழக செயலாளர் வரதராஜன்,  பொருளாளர் ருத்திரன், சுங்க இலாகா அதிகாரி ராமசந்திரன், ஆற்றூர் பேரூராட்சி  முன்னாள் தலைவர் பீனாஅமிர்தராஜ், போதகர்கள் லிப்னிசிங், சிசில்ராஜ் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட தலைமை நீதிபதி கோமதிநாயகம்  வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகோப்பை  வழங்கி சிறப்புரையாற்றினார்.

Related Stories: