வீரகனூர் அருகே நீர்நிலை ஓடையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கெங்கவல்லி, நவ.1:  வீரகனூர் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியில் நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த பாதையை, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அகற்றினர்.கெங்கவல்லி தாலுகா வீரகனூர் அருகே, இலுப்பநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து 50 அடி நீளத்துக்கு பாதை அமைத்து பயன்படுத்தி வந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில், முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கடந்த மாதம் 3ம் தேதி, இலுப்பநத்தம் ஊராட்சியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன்கள் மாற்றுத்திறனாளி பிரகாஷ் மற்றும் அருள் ஆகிய இருவரும், கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன்பு தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து மீட்டனர். இதையடுத்து கெங்கவல்லி தாசில்தார், ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். நேற்று தாசில்தார் சிவக்கொழுந்து, மண்டல துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சிவசங்கரி மற்றும் வீரகனூர் எஸ்ஐ தினேஷ்குமார், ரௌத்திரி வெங்கடேஷ் ஆகியோர், இலுப்பநத்தம் ஊராட்சியில் சிவபெருமாள் நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து அமைத்திருந்த 50 அடிநீள பாதையை அகற்றினர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானப்படுத்தினர்.

Related Stories: