காவிரியில் உபரிநீர் திறப்பை கணக்கில் கொள்ளக்கூடாது காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவரிடம் தமிழக விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

திருச்சி, நவ.1: காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 19வது கூட்டம் முதல் முறையாக திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமாரை சந்தித்து விவசாய அமைப்பினர் மனு அளித்தனர். தமாகா மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் அளித்த மனுவில், ‘கர்நாடகா மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்கக் கூடாது. காவிரி ஆணையம் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் ஒதுக்கீட்டை நாள்தோறும் வழங்க வேண்டும். குறிப்பாக கோடையில் ஜனவரி -ஜூன் வரை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சென்னை உள்பட 24 மாவட்டங்களை சேர்ந்த 5 கோடி மக்களின் நீராதாரமாக காவிரி உள்ளதை மேலாண்மை வாரியம் கருத்தில் கொள்ளவேண்டும். கர்நாடகா அரசு மழைக்காலங்களில் திறக்கும் உபரிநீரை வாரியம் கணக்கில் எடுக்கக்கூடாது. காவிரி ஆணையம் நீர் பங்கீட்டை நடைமுறைப்படுத்த கர்நாடகாவில் உள்ள அணைகளை மாநில அரசிடமிருந்து ஆணையம் தன்வசப்படுத்த வேண்டும். ஆணைய ஒதுக்கீட்டின்படி ஆணையமே நீர் பங்கீட்டு பணியை தினசரி ராணுவம் மூலம் மேற்கொள்ள வேண்டும். காவிரி ஆணைய தலைமை அலுவலகம் பெங்களூருவில் அமைக்க வேண்டும். அதன் மேற்பார்வை அலுவலகம் திருச்சியில் அமைக்க வேண்டும். காவிரி ஆணைய கூட்டம் காவிரி டெல்டாவில் நடத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய கிஷான் சங்க மாநில செய்தித்தொடர்பாளர் வீரசேகரன் அளித்த மனுவில், ‘இக்கூட்டம் சம்பிரதாய கூட்டமாக இல்லாமல் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைய நடைமுறையில் பாசன பங்கீடு அட்டவணையில் உள்ளவாறு மாதாந்திரமான ஒதுக்கீடு இருப்பதில்லை. ஜூன் 9.19 டிஎம்சி, ஜூலை 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் 45.95 டிஎம்சி என 86.38 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்ற நிலையில் தண்ணீர் வழங்காமல் மழைக்காலங்களில் உபரிநீரை வழங்கிவிட்டு, நடப்பாண்டுக்கான ஒதுக்கீடு முழுமையடைந்துவிட்டது என்று கோடைக்கால ஒதுக்கீடான 12.76 டிஎம்சி நீரை தரமறுக்கிறது. உபரிநீர் திறந்துவிடும் வடிகாலாக தமிழகத்தை பயன்படுத்தக்கூடாது’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்க துணைச் செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியம் அளித்த மனுவில், ‘தமிழகத்துக்கு மாதம் தோறும் நீர் வழங்க காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாதா மாதம் வழங்க வேண்டும் என கர்நாடகாவுக்கு அறிவுறுத்த வேண்டும். உபரிநீரை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: