கும்பகோணம்- திருப்புறம்பியம் செல்லும் அரசு பேருந்தின் மேற்கூரையில் சேதம் மழைநீர் ஒழுகுவதால் அவதி போராட்டம் நடத்த மக்கள் முடிவு

கும்பகோணம், நவ. 1: திருப்புறம்பியம் செல்லும் அரசு பேருந்து மேற்கூரை உடைந்து மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நூதன போராட்டம் நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியத்துக்கு தடம் எண் 6 என்ற அரசு பஸ் ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை 7 முறை பாபுராஜபுரம், இன்னம்பூர், புளியம்பாடி, திருப்புறம்பியம் சென்று வருகிறது. இந்த தடத்தில் ஒரு பஸ் மட்டும் இயங்குவதால் 10 கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருக்கும். இன்னம்பூர் மற்றும் திருப்புறம்பியத்தில் உலக புகழ்பெற்ற கோயில்கள் இருப்பதால் விஷேச நாட்களில் பேருந்தில் கூட்டம் அலைமோதும்.

திருப்புறம்பியம் செல்லும் அரசு பேருந்தில் போதுமான பராமரிப்பு இல்லாததால் மேற்கூரை சேதமடைந்தது. இதை சரி செய்யாததால் மேற்கூரையில் இருந்து பேருந்துக்குள் மழைநீர் வடிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகள் மீது மழைநீர் சொட்டு சொட்டாக வடிந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், போக்குவரத்து துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருப்புறம்பியம் கிராமத்தில் மாற்று பேருந்து இயக்ககோரி விரைவில் பஸ்சின் மேற்கூரையில் கீற்று வைத்து மூடும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் கூறுகையில், திருப்புறம்பியத்தில் இருந்து தினம்தோறும் 100க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். பேருந்தின் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்தையும், போக்குவரத்து துறையையும் கண்டித்து விரைவில் அரசு பஸ்சின் மேற்கூரையில் கீற்று வைத்து மூடும் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

Related Stories: