நெய்தலூர் ராஜன் காலனி 2வது வீதி மெட்டல் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்த அவலம்

தோகைமலை, நவ. 1: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்தலூர் வடக்கு ஊராட்சியில் உள்ள 6வது வார்டில் 2ம் உலகப்போரில் கலந்து கொண்ட 82 வீரர்களின் வாரிசுதாரர்கள் வசித்து வருகின்றனர். 1947க்கு முன்பு 2ம் உலகப்போரில் பங்குபெற்ற 82 வீரர்களுக்கு 1401 என்ற மத்திய அரசாணை மூலம் 12.5.1947ல் வீரமானியமாக ஒவ்வொரு வீரருக்கும் தலா 13 சென்டில் வீட்டுமனைகளும், 4 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலமும் அப்போது இருந்த பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பகுதி நெய்தலூர் ராஜன்காலனி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் அரசு வழங்கிய 82 குடியிருப்புகளுக்கும் சுமார் 45 அடி அகலத்தில் வீதிகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் 1947ல் அமைக்கப்பட்ட வீதிகளுக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த 68 ஆண்டுகளாக முன்னாள் ரானுவவீரர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த 2014ம் ஆண்டு 1 வது மற்றும் 2 வது தெருவில் மெட்டல் சாலை மட்டுமே அமைக்கப்பட்டது.

இதனையடுத்து தார்சாலை அமைக்க கோரி இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி கடந்த 11.9.2018 அன்று தினகரன் நாளிதழில் வெளிவந்ததை அடுத்து 840 மீட்டர் தூரம் உள்ள வீதிகளில் 660 மீட்டர் தூரத்திற்கு மட்டும் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கபட்டது. ஆனால் போதிய நிதி இல்லை என்று கூறி மீதமுள்ள 180 மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்காமல் அப்படியே பாதியில் விட்டுள்ளனர;. இதனால் மெட்டல் சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து உள்ளதால் இருசக்கரம், நான்குசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் உள்ளதாக இப்பகுதியினர் கூறுகின்றனர். பாதியில் விடப்பட்ட 180 மீட்டர் மெட்டல் சாலையை தார்சாலையாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: