முத்தலாக் தடை சட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு

கோவை, அக்.31: முத்தலாக் தடை சட்டத்தில் கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-கோவை போத்தனூர் அம்மன்நகரை சேர்ந்தவர் ஹரூண்கான். இவருடைய மகள் வஜீபா(24). இவருக்கும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கோவை அன்னூர் கே.கே.வீதியை சேர்ந்த முகமது செரீப் என்பவரின் மகன் முகமது அலி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக 85 பவுன் நகையும், 101 புடவைகள், 101 சுடிதார் மற்றும் திருமண செலவு முழுவதையும் ஏற்க வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் பெண் வீட்டார் 40 பவுன் நகை போட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டார் வஜீபாவிடம் மீதமுள்ள நகையை வாங்கி வருமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து மீதமுள்ள 45 பவுன் நகைகளை பெண் வீட்டார் சில நாட்களில் கொடுத்துள்ளனர். இதனையடுத்து கேரள மாநிலம் ஹெராய் பீச் ரெஸ்டாரண்டுக்கு சென்றபோது அங்கு வரதட்சணை தொடர்பாக கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வஜீபாவை முகமதுஅலி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வஜீபாவுடன் முகமது அலி சேர்ந்து வாழ மறுத்துவிட்டார். ஜமாத்திலும் பலமுறை பேசி சமாதானம் செய்ய முயன்றும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. பின்னர் முகமது அலி ஜமாத் நிர்வாகிகளுக்கு, வஜீபாவிடம் கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள ரிசார்ட்டில் வைத்து தலாக் சொல்லிவிட்டதாக பொய்யான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து முகமது அலி. அவருடைய உறவினர்கள் பானு, ஜக்காரியா, பாட்ஷா, நிஷா, அன்வர், அவருடைய மனைவி உள்ளிட்ட 7 பேர் தன்னை மனதளவில் கொடுமைப்படுத்தியதாகவும், சட்டத்திற்கு புறம்பாக தலாக் அறிவித்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் வஜீபா புகார் அளித்தார். அதன்பேரில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முகமது அலி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: