திட்டக்குடி, அக். 31: திட்டக்குடி அரசு பேருந்தில் மழைநீர் ஒழுகியதை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் திட்டக்குடி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பெண்ணாடம், இறையூர், தொளார், ஆவினங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நேற்று மதிய வகுப்பிற்கு அரசு பேருந்தில் விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்தனர். பேருந்தில் 45க்கும் மேற்பட்ட பயணிகளும் வந்தனர். வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக கடந்த 2 நாட்களாக திட்டக்குடி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேருந்து முழுவதும் பயணிகள் அமரக்கூட முடியாத அளவில் மழைநீர் ஒழுகியது.
இதில் ஆத்திரமடைந்த திட்டக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் திட்டக்குடி தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்தத்தின் முன்பு பேருந்து நின்றபோது பேருந்தை விட்டு இறங்கி பேருந்து முன் நின்று திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது பேருந்தில் வந்த பயணிகள் இறங்கி மாற்று பேருந்தில் சென்றனர். இதையடுத்து அவ்வழியாக வந்த ராமநத்தம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, திட்டக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் திட்டக்குடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விழிப்புணர்வு கண்காட்சிவிருத்தாசலம், அக். 31: கடலூர் சுகாதார துணை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின்பேரில், விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் வலம்புரிசெல்வன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். இதில் டெங்கு முன் தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி முகாம் நடைபெற்றது. தொடர்ந்து டெங்கு கொசுவினால் பரவும் நோய் பற்றியும், டெங்கு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சுகாதாரக் கல்வி வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.