திருமங்கலம் புதிய பஸ் ஸ்டாண்ட் குறித்து நவம்பர் 1ம் தேதி முதல் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நகராட்சி அறிவிப்பு

திருமங்கலம், அக். 27: திருமங்கலத்தின் மையபகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1.33 ஏக்கர் பரப்பளவில் பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்ட காலகட்டத்தில் குறைந்த அளவே பஸ்கள் வந்து சென்றன. காலபோக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக பஸ்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. 2 நிமிடத்திற்கு ஒரு டவுன்பஸ் வீதம் தற்போது திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்ஸ்டாண்ட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகி வருகிறது.

இதேபோல் மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வெளியூர் பஸ்களுக்கும் முக்கிய பகுதியாக திருமங்கலம் திகழ்ந்து வருகிறது. வெளியூர் பஸ்கள் நிற்க பஸ்ஸ்டாண்டில் போதுமான அளவு இடம் இல்லாத காரணத்தால் மதுரை ரோட்டில் போலீஸ் ஸ்டேசன் எதிரே தற்போது நின்று செல்கின்றன. எனவே திருமங்கலத்தில் புதியதாக பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து திருமங்கலம் வேங்கடசமுத்திரம் பகுதியில் மதுரை நெல்லை நான்கு வழிச்சாலையின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 6.28 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க நகராட்சி முடிவு செய்தது. இதனை ஏற்று தமிழக அரசு கடந்த மே மாதம் ரூ.21.72 கோடியில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. திருமங்கலத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் ஆலோசனை மற்றும் ஆட்சேபணைகள் பெறுமாறு நகராட்சி ஆணையருக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் புதிய பஸ்ஸ்டாண்ட் நிலையத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த அறிவிப்பாணை நகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே புதிய பஸ்ஸ்டாண்ட் குறித்த பொதுமக்கள் தங்களது கருத்துகளை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 30 வரையில் தெரிவிக்கலாம். தங்களது கருத்துகளை பொதுமக்கள் பின்வரும் இணையதளம் வழியாகவோ (tnurbantree.gov.in/tirumanagalam) அல்லது எழுத்துப்பூர்வமாக நேரில் தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, பொறியாளர் சக்திவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: