கரூர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் குளித்தலை நகராட்சி பகுதியில் பாசன வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் வலியுறுத்தல்

குளித்தலை, அக். 27: குளித்தலை நகராட்சி பகுதியில் பாசன வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர் வார வேண்டும் என்று உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் வலியுறுத்தி உள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் கோபால தேசிகன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது: குளித்தலை நகராட்சி பல ஆண்டுகளாக பேரூராட்சியாக செயல்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த குளித்தலை நகராட்சியில் எல்லைப் பகுதியில் சேரும் அனைத்து கழிவுநீரும் நகராட்சி எல்லைக்குள் பாயும் சிறிய கன்னி வாய்க்கால்களில் வரையப்பட்டு பாசன வாய்க்கால் என்பது மாறி கழிவுநீர் வடிகால் ஆகி முழுவதும் தூர்ந்து உள்ளதால் விவசாயத்திற்கு பாசனத்திற்காக தண்ணீர் இல்லாத நிலை உள்ளது.

மேலும் வைகை நல்லூர், வடக்கு குளித்தலை தென்கரை வாய்க்கால், எஸ்பிபி ஆயக்கட்டு விவசாயிகள் பாசனத்தை இழந்து வாழ்வாதாரம் இன்றி பல ஆண்டுகளாக சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். நகரப்பகுதி கொசுக்களின் பிறப்பிடமாக சுகாதாரக் கேடு விளைவித்து வருகிறது. இந்நிலை குறித்து பலமுறை கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

இது குறித்து சென்ற மாதம் குளித்தலை உப கோட்டம் ஆற்றுப் பாதுகாப்பு நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் இடம் கோரிக்கை விடப்பட்டது. அப்போது குளித்தலை நகராட்சி எல்லைக்குள் செல்லும் தென்கரை வாய்க்கால் பாசனம் பெறும் கிளை வாய்க்கால்கள் நகர விஸ்தரிப்பு காரணமாகவும், விளை நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி உள்ள காரணத்தினால் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் வாய்க்காலில் கலந்து சாக்கடையாக மாறி உள்ளன.

வாய்க்கால்கள் தலைப்பு மதகுகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் தண்ணீர் செல்ல முடியாமல் சாக்கடை கழிவுநீர் எதிர்திசையில் வாய்க்காலில் கலப்பதால் தலைப்பு மதகுகள் நிரந்தரமாக போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடுத்து வந்த தீர்ப்பின்படி சுகாதார நலன் கருதி குளித்தலை நகராட்சி எல்லைக்குள் செல்லும் ஆறு கிளை வாய்க்கால்களை வருவாய் துறையிடம் இருந்து உலக வரைபடம் மற்றும் பதிவேடுகளை பெற்று குளித்தலை நகராட்சி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே குளித்தலை நகராட்சி மூலமே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து குளித்தலை நகராட்சி சார்பில் அளித்த பதில் கூறியிருப்பதாவது குளித்தலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆண்டாள் தெரு கல்மண்டபம் குறவன் கண்ணாறு மாரியம்மன் கோவில் எடத்தெரு மற்றும் எருக்கன் கட்டை ஆகிய வாய்க்கால்கள் தற்போது தூர்ந்து கழிவுநீர் வழியாகச் செல்கிறது. இந்த வடிகால்களை அளந்து விரிவான நகர அளவை வரைபடம் தயார் செய்து நகராட்சி வழங்க வட்டாட்சியர் குளித்தலை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வருவாய் துறையிலிருந்து விவரங்கள் பெற்று பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் ஆண்டாண்டு காலமாக தீராத விவசாயிகள் பிரச்சனையான குளித்தலை நகரத்தில் பாசனத்திற்கு செல்லும் பாசன வாய்க்கால்களில் தூர்வாராததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையைப் போக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படாத நிலையில் உள்ள வாய்க்கால்களை அடையாளம் கண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிமராத்து பணி நிதி ஒதுக்கீட்டின் கீழ் அல்லது நகராட்சியின் பொது நிதியிலிருந்து அனைத்து பாசன வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நகர மக்களை கொசுத் தொல்லையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: