திருத்தணி வீரட்டீஸ்வரர் கோயில் அருகே டாஸ்மாக் மது கடையால் பக்தர்களுக்கு இடையூறு

திருத்தணி, அக். 25: திருத்தணி வீரட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்த உபகோயிலான வீரட்டீஸ்வரர் கோயிலுக்கு சுற்றுச்சுவர் கிடையாது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வீரட்டீஸ்வரர் கோயில் அருகே டாஸ்மாக்  கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு மதுபாட்டில் வாங்கிக்கொண்டு குடிமகன்கள் கோயில் நுழைவு வாயில் முன் அமர்ந்து அருந்துகின்றனர். பின்னர், காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். குடிபோதையில் தகராறு செய்வதால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள், பயத்துடனேயே கோயிலுக்கு வருகின்றனர். மேலும்,  கோயிலுக்கு அருகே பாலத்தின் அடியில் அமர்ந்து மது அருந்துவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வீரட்டீஸ்வரர் கோயில் அருகே உள்ள மதுக்கடையில் மது வாங்கி அங்கேயே குடிக்கின்றனர். இதனால் அந்த பகுதியை கடக்கும்போது கிண்டல் செய்வதால் பெண்கள், மாணவிகள் பயத்துடன்  செல்கின்றனர். இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியாவது மதுக்கடையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு உடனே மாற்ற  வேண்டும்’’ என்றனர்.

Related Stories: