குழந்தையை போல் முதியோரை பராமரிப்பது வாரிசுகளின் கடமை முதியோர் தினவிழாவில் கலெக்டர் அறிவுறுத்தல்

திருச்சி, அக்.23: திருச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் சர்வதேச முதியோர் தினவிழா நடைபெற்றுது.கலெக்டர் சிவராசு தலைமை வகித்து, 90 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை கவுரவித்து, முதியோர் இல்லங்களுக்கு டிவி வழங்கியும், நலிவுற்ற முதியோர்களுக்கு புடவைகள் வழங்கியும், கோலம், இசை நாற்காலி, பாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: சர்வதேச முதியோர் தினம் அக்டோபர் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. முதியோரை நாம் முறையாக பராமரிக்க வேண்டும். வயதான பின் தங்கள் பெற்றோர், தாத்தா-பாட்டியினருக்கு அவர்களது வாரிசுகள் வசதிகள் செய்து தரவேண்டும். தமிழக அரசு முதியோர் நிதி உதவி வழங்கி வருகிறது. நிதியுதவி பெற்று தொண்டு நிறுவனங்கள் முதியோர் இல்லம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 24 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல சட்டம் 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி பெற்றோரின் மகன், மகள், வாரிசுகள், பெற்றோர்களின் மூத்த குடிமக்களையும் பாதுகாப்பது ஒவ்வொரு வாரிசுகளின் அடிப்படை கடமையாகும். சரியான முறையில் பெற்றோர்களை வாரிசுகள் பராமரிக்கவில்லை எனில் சட்டத்தின் மூலம் அவர்களின் அடிப்படை கடமைகளை வாரிசுகள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிவகை செய்கிறது.

பெற்றோர்கள் தான் பெற்றெடுத்த பிள்ளைகளை எவ்வளவு பரிவோடும், பாசத்தோடும், பராமரித்து பாதுகாத்து வளர்த்து நல்ல குடிமக்களாக வளர்த்தார்களோ அதே வகையில் அப்பெற்றோர்களை பராமரித்து பாதுகாப்பது பிள்ளைகளின் கடமையாகும். இளைய தலைமுறைகள் பெற்றோர்களை பாதுகாக்க வேண்டும். முந்தைய காலங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை கலாச்சாரம் கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களின் சிறப்பான பட்டறிவுகள், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ வழிவகுக்கும். இவ்வாறு கலெக்டர் சிவராசு பேசினார்.மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா, சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் ராஜவேல் (துறையூர்), மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், முதியோர் நலக்குழு உறுப்பினர் திருமலைராஜ், பெண்கள் மேம்பாட்டு திட்டக்குழு உறுப்பினர் சகுந்தலா சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: