திருத்தணி அருகே காலனி சாலையை சீரமைக்காததை கண்டித்து மாணவர்கள் மறியல்

திருத்தணி, அக். 23: திருத்தணி அருகே கிருஷ்ணசமுத்திரம் - பெருகுமி காலனி சாலையை சீரமைக்காததை கண்டித்து மாணவர்களுடன் இணைந்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். திருத்தணி அருகே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி பெருகுமி காலனியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் திருத்தணி மற்றும் பொதட்டூர்பேட்டைக்கு செல்ல காலனியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து பேருந்துகளில் சென்று வருகின்றனர். கிருஷ்ணசமுத்திரத்தில் இருந்து பெருகுமி காலனிக்கு செல்வதற்கு வயல்வெளி வழியாக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மண் சாலை சேதம் அடைந்தும், குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டதால் காலனி மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் கடும் அவதிப்பட்டனர்.

இச்சாலையை சீரமைக்குமாறு பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், நேற்று ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திடீரென திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில முதன்மை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக சென்ற நான்கு அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, பாபு, திருத்தணி உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களிடம் சமரசம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: