ஆவடி அருகே அண்ணனூரில் மின் விளக்கு எரியாமல் இருளில் மூழ்கும் சாலை

அண்ணனூர், அக். 18:  ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில்வே ஸ்டேசன் சாலை, சிடிஎச் சாலை ஆகியவை சந்திக்கும் இடத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைந்துள்ளது. இந்த விளக்கு வெளிச்சத்தை பயன்படுத்தி அண்ணனூர் பகுதியை ஜே.பி.நகர், ஜோதி நகர், சிவசக்தி நகர், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும், இந்த உயர்கோபுர மின்விளக்கால் சிடிஎச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக உயர்கோபுர மின்கம்பத்தில்  உள்ள ஒரு விளக்கு மட்டுமே எரிகிறது. மற்ற அனைத்து விளக்குகளும் பழுதாகி எரியாமல் கிடக்கிறது. இதனால் சி.டி.எச் சாலை- அண்ணனூர் ரயில்வே ஸ்டேசன் சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சி.டி.எச் சாலை-ரயில்வே ஸ்டேஷன் சாலை சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் உள்ளதால் அண்ணனூர் பகுதிகளுக்கு இரவில் வேலை முடிந்து செல்லும் தொழிலாளர்கள் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். மேலும், டியூஷன் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்களும் இன்னல் அடைகின்றனர். கடைகளுக்கு செல்லும் பெண்களும் அச்சத்துடன் தான் செல்கின்றனர்.

மேலும், இரவில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும் பெண் தொழிலாளர்களிடம் சில்மிஷம், வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருளை பயன்படுத்தி சமூக விரோதிகள் வணிக நிறுவனங்களை உடைத்து கொள்ளை செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பலமுறை ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, இனிமேலாவது ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலை-சிடிஎச் சாலை சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’  என்றனர்.

Related Stories: