அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில்வே சுரங்கப்பாதையில் இடிந்து விழுந்த பாறாங்கற்கள்

கடையம், அக். 18:  ஆழ்வார்குறிச்சி பகுதியில் நேற்று அதிகாலை பெய்த மழையின்போது செங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதையில் பாறாங்கற்கள் இடிந்து விழுந்தன. ஆழ்வார்குறிச்சி அருகே  செங்கானூர் கிராமத்தில்,  நெல்லை - செங்கோட்டை ரயில் தண்டவாளத்தில் எல்சி 66 ரயில்வே கேட் இருந்தது. இந்த கேட்டை அகற்றிவிட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இங்கு தேங்கும் மழைநீரை வெளியேற்ற அருகிலேயே மோட்டார் செட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று அதிகாலை கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதில் சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவற்றின் மேலுள்ள பாறாங்கற்கள் இடிந்து பாதையில் விழுந்தன. இதனால் நேற்று காலை அப்பகுதி மாணவ, மாணவிகள் சுரங்கப்பாதை வழியாக செல்ல பயந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதில் இருந்தே தினமும் இதனை கடந்து வருவதற்குள்  திக்... திக்... பயணமாக உள்ளது. இங்கு தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருகின்றனர். மேலும் சுரங்கப்பாதையில் ஊற்று போன்று தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பக்கவாட்டு சுவரை பாறை பகுதி வரைக்கும் உயர்த்தி கட்டாமல் விட்டதால்தான் பாறாங்கற்கள் இடிந்து விழுந்துள்ளன. இதே நிலை நீடித்தால் வடகிழக்கு பருவமழைக்கு தீவிரமடையும் முன் அனைத்து பாறைகளும் இடிந்து விழுந்து செங்கானூர் கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், செங்கானூர் ரயில்வே சுரங்கப்பாதையை பார்வையிட்டு இங்கு தேங்கும் தண்ணீரை வெளியேற்றவும், பாறாங்கற்கள் இடிந்து விழாமல் இருக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.இதனிடையே நேற்று மாலை பெய்த கனமழையில் சுரங்கப்பாதையில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் வேறு வழியின்றி தண்ணீரில் இறங்கி தத்தளித்தபடியே சென்றனர். சிறார்களை கிராம மக்கள் கையில் தூக்கிச் சென்றனர்.

Related Stories: