திருமண உதவித்தொகை திட்டம்; 4500 பெண்கள் காத்திருப்பு

கோவை, அக். 10:கோவை மாவட்டத்தில் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ்  4 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பித்து உதவித் தொகைக்காக காத்திருக்கின்றனர் என மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், சமூகநலத் துறையின் கீழ் பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம்,  ரூ.25 ஆயிரமும், பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 4 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரமும் திருமண உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 4 கிராம் தங்கம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளியப் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பு மாதம் வரை 4 ஆயிரத்து 500 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஒராண்டுகளுக்கு மேலாகியும் உதவித்தொகை கிடைக்காமல் பெண்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Advertising
Advertising

இது குறித்து சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருமண உதவித்தொகை திட்டம் அந்தந்த வட்டாரம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. பதிவேற்றம் முதல் பணம் வழங்குவதுவரை ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுவதால் தலைமையகத்தில் இருந்தே பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை சரிபார்த்து தலைமையகத்துக்கு அனுப்புவது மட்டுமே எங்களின் பணியாகும். ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, 2018 மார்ச் 31ம் தேதி வரை விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக 2019 மார்ச் 31 வரை விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்,‘‘ என்றார்.

Related Stories: