கிருஷ்ணா கால்வாயில் குளிக்க தடை: பொதுப்பணி துறை நடவடிக்கை

ஊத்துக்கோட்டை, அக். 10:  தினகரன் செய்தி எதிரொலியாக கிருஷ்ணா கால்வாயில்  குளிக்க தடை விதித்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு தமிழகத்திற்கு  வழங்க வேண்டும்.  இதையேற்று, ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து கடந்த 25ம்  தேதி காலை வினாடிக்கு 500  கன அடி வீதம் தண்ணீர் திறந்தது. பின்னர், 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தியது.   6 நாட்களில் தமிழக எல்லைக்கு வரவேண்டிய இந்த தண்ணீர், ஏற்கனவே, மழை பெய்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் தேங்கி கிடந்ததால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டிற்கு 4வது நாளான  28ம் தேதி காலை 10.30 மணிக்கு  வந்தடைந்தது. தற்போது கண்டலேறுவில் 1,300 கன அடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை  ஜீரோ பாயிண்ட்டில், தற்போது 700 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் பகுதியிலும், ஜீரோ பாயிண்ட்டிற்கும் - ஆந்திர மாநிலம் சத்தியவேடுவிற்கும் இடையில் பூதூர் என்ற இடத்திலும், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியிலும் கிருஷ்ணா கால்வாயில் செல்லும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள், மாணவர்கள் குளித்து வருகிறார்கள்.

இதுபோல், கிருஷ்ணா கால்வாய் தண்ணீரில் மாணவர்கள் குளிப்பதால் நீர் மாசுபடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உயிருக்கு ஆபத்தாக கூட முடியலாம். ஏனென்றால், கால்வாயில் செல்லும் தண்ணீர் மேலோட்டமாக பார்க்கும்போது தண்ணீர் நிதானமாக செல்வது போல்தான் தெரியும்.

ஆனால், கீழ் பகுதியில் தண்ணீரின் அளவு அதிமாகவே சுழன்று சுழன்று செல்லும் இந்த சுழலில் குளிக்கும் சிறுவர்கள் சிக்கிக்கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.  எனவே, சிறுவர்கள் குளிப்பதை  தடை செய்ய வேண்டும் என தினகரன் நாளிதழில் படத்துடன்  கடந்த 1ம் தேதி செய்தி வெளியானது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜெகதீசன் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார். மேலும், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து பாதயாத்திரை சென்ற பக்தர்களும் குளித்தனர். இது குறித்தும்  தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில்,  இதையடுத்து நேற்று பொதுப்பணித்துறை சார்பில், இந்த இடத்தில் யாரும் குளிக்க கூடாது மீறினால் காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Related Stories: