விஜயதசமி கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான குழந்தைகள் நெல் மணிகளில் அ, ஆ எழுதினர்

திருவாரூர், அக். 9: திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் விஜயதசமியையெட்டி நேற்று நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நெல்மணிகளில் அ, ஆ எழுதி கல்வியை துவக்கினர்.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் மகாசரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலானது இந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என்று தனி சன்னதியை கொண்ட கோயில் என்ற சிறப்பினை கொண்டது. கல்விக்கு அரசி என்று அழைக்கப்படும் இக்கோயிலில் உள்ள அம்மனை கல்வி வளர்ச்சிக்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் மற்ற கோயில்களில் ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களை போன்று இல்லாமல் இக்கோயிலில் நவராத்திரி விழா மட்டுமே உற்சவ விழாவாக நடைப்பெற்று வருகிறது.

அதன்படி கடந்த மாதம் 29ம்தேதி முதல் துவங்கிய நவராத்திரி விழாவினையொட்டி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் சரஸ்வதி பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையில் ஏராளமான பக்ர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த கோயிலில் விஜயதசமி நாளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு முன்னதாக இந்த வித்தியாரம்ப நிகழ்ச்சிக்கு தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து கோயில் சன்னதியில் அமர வைத்து அங்கு நெல்மணிகளை பரப்பி அதில் அ மற்றும் ஆ எழுத்துக்களை எழுதி பழக வைப்பர். இதுமட்டுமின்றி ஏற்கனவே கல்வி கற்று வரும் தங்களது குழந்தைகள் கல்வியில் மேலும் சிறந்து விளங்க இக்கோயிலுக்கு இந்தியா முழுவதுமிருந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று விஜயதசமியையொட்டி இந்த வித்யாரம்ப நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: